×

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

கரூர், ஜூலை 2: தாந்தோணிமலை கடைவீதியில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் இருந்து தாந்தோணிமலை, அரசு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி பை-பாஸ் சாலை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்ககேட், தாந்தோணிமலை வழியாக சென்று வருகிறது. இதில், தாந்தோணிமலை சாலையில் மில்கேட் பகுதியில் இருந்து பழைய எஸ்பி அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

குறிப்பிட்ட தூரம் வரை, வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், டாஸ்மாக் நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற பகுதிகளுக்கு வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத அளவுக்கு சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுவதோடு, நீண்ட நேரம் கழித்து வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர். சாலையின், இருபுறமும் எல்லையை குறிக்கும் வகையில் வெள்ளை கோடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டையும் ஆக்ரமித்து, சின்ன வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத அளவுக்கு வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் வரிசையாக நிறுத்தப்படுகிறது.

குறிப்பாக, டாஸ்மாக் கடைக்கு வருபவர்களால் அதிக போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அருகிலேயே செயல்படும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையில் இந்த பகுதிதான் போக்குவரத்துக்கு பெரிதும் சவாலாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்த சாலையில் அடிக்கடி வாகன நெருக்கடியால் போக்குவரத்து பாதிப்பும், சிறு விபத்துகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே, இதனை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன நிறுத்தத்தை முறையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanthonimalai shopping street ,Karur ,Thanthonimalai ,street ,Dinakaran ,
× RELATED தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்